ஐபிஎல் 2021 தொடரில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை பங்கேற்ற லீக் சுற்றில் 7 வெற்றிகளைப் பெற்று 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.
Virat Kohli | Glenn Maxwell (Photo : BCCI/IPL) |
அந்த அணி இன்னும் 1 வெற்றியை பெறும் பட்சத்தில் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசம் ஆகிவிடும்.
ஜொலிக்கும் பெங்களூரு:
இந்த சீசனில் அந்த அணிக்காக விளையாடும் அனைத்து வீரர்களும் சீராக பங்களித்து வருவதே அந்த அணியின் வெற்றியில் எதிரொலிக்கிறது. பார்மில் இல்லாத சஹால் ஹர்சல் பட்டேல் போன்ற பந்துவீச்சாளர்கள் ஃபார்முக்கு வந்து மீண்டும் விக்கெட்டுகளை எடுக்கத் தொடங்கி உள்ளனர்.
பேட்டிங்கில் விராட் கோலி, படிக்கல் ஆகியோர் நல்ல தொடக்கம் கொடுக்க இளம் வீரர் கேஎஸ் பரத் உடன் இறுதியில் கிளன் மேக்ஸ்வெல் அதிரடியாக பினிஷிங் செய்து வெற்றியை பெற்று கொடுக்கிறார்.
குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் 150 ரன்கள் இலக்கை துரத்திய பெங்களூருவுக்கு வெறும் 30 பந்துகளில் 50* ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து வெற்றிக்கு வித்திட்டார்.
மோசமான மேக்ஸ்வெல்:
கடந்த 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் பங்கேற்ற கிளன் மேக்ஸ்வெல் வெறும் 103 ரன்கள் மட்டுமே எடுத்து படுமோசமான பார்மில் இருந்தார், இதன் காரணமாக அவரை பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் ஐபிஎல் தொடரில் இருந்து கழட்டி விட்டது.
Virat Kohli (Photo : BCCI/IPL) |
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் கிளன் மேக்ஸ்வெல் வாழ்க்கையை விராட் கோலி அதிக நம்பிக்கை கொடுத்து காப்பாற்றியுள்ளதாக வெஸ்ட் இண்டீசின் ஜாம்பவான் பிரையன் லாரா தெரிவித்துள்ளார். இதுபற்றி ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர்,
2019 மற்றும் 2020 ஆகிய வருடங்களில் மேக்ஸ்வெல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக மட்டுமல்லாமல் தனது ஒட்டுமொத்த ஐபிஎல் கிரிக்கெட்டில் படுமோசமான பார்மில் இருந்தார். அந்தத் தருணத்தில் அவரின் ஐபிஎல் வாழ்க்கை முடிந்து விட்டது போல் தோன்றியது. இந்த இடத்தில் விராட் கோலியின் பெயரை உபயோகிக்க விரும்புகிறேன் ஏனெனில் அது போன்ற ஒரு மோசமான தருணத்தில் "பெங்களூர் அணியில் வந்து சேருங்கள்" என விராட் கோலியிடம் இருந்து ஒரு அழைப்பு உங்களுக்கு வருவதை நினைத்து பாருங்கள், அனேகமாக கடினமான நேரத்தில் விராட் கோலி கொடுத்த அந்த ஆதரவு தான் அவரின் நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது என நினைக்கிறேன், பஞ்சாப் அணியில் இருந்து பெங்களூர் அணிக்கு மாறியது மேக்ஸ்வெல்க்கு மிகப்பெரிய அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது
என கூறினார். 2020 ஐபிஎல் தொடருடன் கதை முடிந்து விட்டதாக நினைத்த வேளையில் மேக்ஸ்வெலை நம்பிய விராட் கோலியின் பெங்களூர் அணி நிர்வாகம் அவரை 2021 ஐபிஎல் தொடருக்கு 14.25 கோடிகள் என்ற பெரிய தொகையை கொடுத்து விலைக்கு வாங்கியது.
நம்பிக்கை :
அவரும் தன் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றி இந்த வருடம் இதுவரை பங்குபெற்ற 11 ஐபிஎல் போட்டிகளில் 350 ரன்களையும் 3 விக்கெட்டுகளை எடுத்து பெங்களூருவின் வெற்றிகளுக்கு வித்திட்டு வருகிறார்.
டி20 உலக கோப்பை 2021 தொடருக்கு முன்பாக அவர் பார்க்குக்கு திரும்பி உள்ளதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களும் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.