வெறும் 10 லட்சத்துக்காக சூதாட்டம் செய்திருப்பேனா - மறுக்கும் ஸ்ரீசாந்த்

கேரளாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் வளர்ந்து வரும் பந்துவீச்சாளராக நம்பிக்கை அளித்தார்.

Sreesanth (Photo : BCCI/IPL)

இவர் 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை மற்றும் 2011 50 ஓவர் உலகக் கோப்பையை என இந்தியா வென்ற 2 உலகக் கோப்பைகளில் முக்கிய பங்காற்றினார்.

சூதாட்ட புகார் :

இதனால் இந்தியாவின் அடுத்த மிகப் பெரிய பந்து வீச்சாளராக உருவெடுப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் கடந்த 2013ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய அவர் சூதாட்டப் புகாரில் மேலும் 2 வீரர்களுடன் சிக்கினார், இதன் காரணமாக கைது செய்யப்பட்ட இவரின் கிரிக்கெட் வாழ்க்கை அன்றோடு முடிந்து போனது என்றே கூறலாம்.

மறுக்கும் ஸ்ரீசாந்த் :

இந்த நிலையில் இதுவரை அந்த சூதாட்ட சர்ச்சை பற்றி எதுவும் பேசாத ஸ்ரீசாந்த் முதல் முறையாக தற்போது மனம் திறக்கிறார். இது பற்றி ஸ்போர்ட்ஸ்கீடா இணையதளத்தில் அவர்,

"அந்த நேரத்தில் நான் இரானி கோப்பையில் விளையாடிய பின் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்பதற்காக 2013 தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடரில் விளையாட காத்திருந்தேன். அந்தத் தொடர் முன்கூட்டியே செப்டம்பரில் தொடங்க இருந்தது, அந்த தொடரில் விளையாடுவதே எனது இலக்காக இருந்தது, அது போன்ற மன நிலைமை கொண்ட ஒரு மனிதர் எதற்காக அப்படி (சூதாட்டம்) செய்திருக்க வேண்டும் அதுவும் வெறும் 10 லட்சத்திற்க்காக, பொதுவாக நான் செல்லும் பார்ட்டிக்கு 2 லட்சம் வரையில் பில் செலுத்துவேன்"

"ஒரு ஓவரில் 14 ரன்கள் என கருதப்பட்டது. நான் முதல் 4 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தேன், நோபால் வீசவில்லை வைட் பந்து வீசவில்லை, அதேபோல் மெதுவான பந்தையும் வீசவில்லை. எனது காலில் 12 தையல்கள் போட்ட பின்பும் கூட நான் 130 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசினேன்"

என ஸ்ரீசாந்த் கூறினார். பொதுவாக ஒரு பார்ட்டிக்கு செல்லும் போது 2 லட்சம் ரூபாய் வரை பில் கட்டுபவனாக இருக்கும் நான் வெறும் 10 லட்சத்துக்கு ஆசைப்பட்டு சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பேனா என கேட்கிறார், அத்துடன் இந்தியாவிற்காக விளையாட வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஆழமாக இருந்து இருக்கும்போது எவ்வாறு அது போன்ற தவறுகளை தாம் செய்திருக்க முடியும் என கூறினார்.

சூதாட்ட பிரச்சனையில் சிக்கிய அவரை பிசிசிஐ வாழ்நாள் தடைவிதித்த காரணத்தால் மீண்டும் இந்தியாவிற்காக விளையாடும் வாய்ப்பை முற்றிலுமாக இழந்தார், இருப்பினும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த காரணத்தால் இவரின் வாழ்நாள் தடையை 7 வருடமாக பிசிசிஐ குறைத்தது.

மீண்டும் ஸ்ரீசாந்த்:

இதன் காரணமாக கடந்த வருடம் முதல் உள்ளூர் போட்டிகளில் கேரளா அணிக்காக விளையாடி வருகிறார். இதுபற்றி அவர் கூறுகையில்,

"எனது வாழ்நாளில் நிறைய பேருக்கு நான் உதவி உள்ளேன் அவர்களின் பிரார்த்தனையால் அந்த பிரச்சனையில் இருந்து தற்போது முழுமையாக வெளியே வந்து உள்ளேன். விசாரணையில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்களுக்கு நான் கேட்பதெல்லாம் ஒன்றுதான் - முதலில் வீசிய 4 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து நான் அடுத்த 2 பந்துகளில் எப்படி அத்தனை ரன்களை கொடுத்திருப்பேன், கண்ண்டிப்பாக இல்லை"

என வேண்டுமென்றே கடைசி 2 பந்துகளில் அதிக ரன்களை கொடுக்கவில்லை எனக் கூறிய ஸ்ரீசாந்த் தன் மீது சுமத்தப்பட்ட சூதாட்ட புகாரை தற்போதும் கூட மறுக்கிறார்.

நடைபெற்று வரும் 2021 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் கடந்த வருடம் அவர் தனது பெயரை தாக்கல் செய்திருந்தார் இருப்பினும் எந்த ஒரு அணியும் அவரை ஏலத்தில் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post

Your Reaction